அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா, ஐந்தே நாட்களில் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டார் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மதுரை ஆவின் தலைவராக ஓ.ராஜா, கடந்த டிச.19-ம் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
இதனால் ஓ.ராஜா ஆவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. கட்சியிலிருந்து அவரை நீக்கி அறிவிப்பு வெளியிட்ட தலைமை, ஆவின் தலைவராக அவர் தொடர்வது குறித்து எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை.
அதிமுக கட்சி நிர்வாகி ஒருவர் இருக்க வேண்டிய பதவியில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் எப்படி செயல்பட முடியும்? அதிமுக சார்பில் தேர்வான இயக்குநர்கள் ஓ.ராஜாவுக்கு எப்படி ஒத்துழைப்பு தருவார்கள்? ஆவின் அதிகாரிகள் தலைவரின் உத்தரவுகளை தயக்கமின்றி செயல்படுத்துவார்களா என பல கேள்விகள் எழுந்தன.
இந்த குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஓ.ராஜா சந்தித்தாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று நேரிலும், கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்ததால் கட்சியில் ஓ.ராஜா இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளனர்.