கடந்த 21 ஆம் தேதி சென்னை ஐஐடியில் ஒரே நாளில் 12 பேருக்கு கரோனா செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் கரோனா ஒருநாள் பாதிப்பு இன்றிலிருந்து அதிகரிக்கலாம் என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அதன்படியே அன்று ஒரே நாளில் தமிழகத்தில் 39 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மாஸ்க் அணிவதும் கட்டாயம், மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதேபோல் மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்தது.
நேற்று (23/4/2022) ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை அங்கு 55 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் மொத்தம் 1,420 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் XE வகை கரோனா கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.