டெல்லி சென்று திரும்பிய திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. உடனடியாக அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த 17 பேரின் குடும்ப உறுப்பினர்கள் 67 பேர் மற்றும் தாமாக முன்வந்த 21 பேர் என மொத்தம் 88 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் 17 பேரின் குடும்பத்தில் 3 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அட்மிட் ஆகமாட்டேன் என்று அடம் பிடித்தார். சுகாதாரத் துறையினர் அவரது வீட்டிற்கே சென்று அழைத்தும், ஒத்துழைக்கவில்லை. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிக்கு செல்போனில் அழைத்து, என்னால் வரமுடியாது என்று கூறியிருக்கிறார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சிகிச்சையில் இருந்த நோயாளி, நான் மட்டும் இங்க கிடந்து சாகணுமா? நீங்களும் செத்துப்போங்க எனக் கத்தியபடி, முகத்தில் அணிந்திருந்த மாஸ்கைக் கழற்றி டாக்டர் மீது வீசியும், செவிலியர் மீது எச்சில் உமிழ்ந்தும் தகராறில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அரசு மருத்துவமனை செவிலியர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நோய்த்தொற்று இருப்பது தெரிந்தும் செவிலியர் மீது எச்சில் உமிழ்ந்த குற்றத்திற்காக, நோயாளி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.
-ஜெ.தாவீதுராஜ்.