புழல் சிறையில் கைதிகள் அறையில் டிவி, செல்போன், கட்டில் உள்ளிட்ட சொகுசு பொருள்கள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து சேலம் மத்திய சிறையிலும் இன்று போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை புழல் சிறையில் குறிப்பிட்ட சில கைதிகளின் அறைகளில் மெத்தை, தலையணைகளுடன் கூடிய சொகுசு கட்டில், டிவி, டிவிடி பிளேயர், செல்போன், ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட சொகுசு பொருள்கள் இருப்பது குறித்த படங்கள் இரு நாள்களுக்கு முன்பு, சமூக ஊடகங்களில் வெளியானது. அதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் கைதிகள் அறைகளில் இருந்து 13 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் முக்கிய சிறைகளில் கைதிகளின் அறைகளை சோதனையிட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, சேலம் மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் 40 போலீசார், இன்று காலை சேலம் மத்திய சிறையில் திடீர் சோதனை நடத்தினர். சுமார் மூன்று மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள கைதிகளின் அறைகளில் தீவிர சோதனை நடந்தது. இந்த சோதனையில் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யப்படும் பேட்டரிகள், சிம் கார்டுகள், பீடிகட்டுகள், சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேபோல் கோவை, கடலூர் மத்திய சிறைகளிலும் இன்று காலை போலீசார் திடீர் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.