எடுபிடி முதலமைச்சராக இருப்பதைவிட செயல்படாத தலைவராக இருக்கலாம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். அப்போது, என்னுடைய தலைமையை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தட்டி பறித்துவிட்டார் என அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ‘இந்த குடும்ப விழாவில் என்னுடைய தலைமைப் பொறுப்பை யாராளும் தட்டிப்பறிக்க முடியாது’ என்று கூறி உதயநிதியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். மேலும் பேசிய அவர், ‘வெளிநாடு செல்லவிருந்ததால் உதயநிதிக்கு தலைமையேற்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்றும், அந்த பயணம் ரத்து செய்யப்பட்டால் தனது தலைமையில் விழா நடைபெறுவதாக' விளக்கமளித்தார்.
முன்னதாக கிருஷ்ணகிரியில் நேற்று மு.க.ஸ்டாலின் குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செயல்படாத ஸ்டாலினை செயல் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனம் குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின்,
எடுபிடி முதலமைச்சராக இருப்பதைவிட செயல்படாத தலைவராக இருக்கலாம் என்றார். மேலும், சேலம் 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நின்று பேட்டி கொடுக்கும் தெம்பு முதலமைச்சருக்கு இருக்கிறதா? 8 வழிச்சாலைக்கு மாற்று வழியை நிபுணர் குழு அமைத்து தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.