சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஆச்சிமுத்து என்பவர் மகன் சங்கர் என்கிற சவுக்கு சங்கர். யூடியூபரான இவர் தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) தேனியில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் இந்த கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக அவர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி மாவட்ட பழனி செட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இத்தகைய சூழலில் சி.எம்.டி.ஏ. (CMDA) அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கையை கோயம்புத்தூர் சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு நேற்று முன்தினம் (12.05.2024) சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் வழங்கப்பட்டது.
இவர் மீது சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட விவகாரத்தில் ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர் தலைமையிலான இரண்டு காவலர்கள் என மொத்தம் 5 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக சோதனையிட சென்ற போலீசாருக்கு அனுமதி மறுத்து பெலிக்ஸின் மனைவி ஜேன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.