சாலை விபத்து தடுப்பு குறித்து எவ்வளவு பதாகைகள், நோட்டீஸ்கள் கொடுத்தும் பொதுமக்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என்பதால் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க போலீசார் ஊர்வலம் நடத்தினர். அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீசார்தான் சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவர்களைக் கொண்டு இந்த ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.
இந்த ஊர்வலத்தை உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்திற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி முன்னிலை வகித்தார். உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்–இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், மீனாட்சி ராமசாமி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி பேசுகையில், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.