புதுச்சேரியில் தலைக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது அந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பெண்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கட்டாய தலைக்கவசம் திட்டம் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் பலர் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களில் செல்வதை படம் பிடித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்ட துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் புதுச்சேரியில் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை மீண்டும் அமல்படுத்த டிஜிபி சுந்தரி நந்தா அறிவித்தார்.
அதையடுத்து நேற்று முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிந்து பயணம் செல்லும் நிலையில், தலைக்கவசம் அணியாமல் பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ‘ஸ்பாட் பைன்’ இல்லாமல் வாகன எண்கள் பதிவு செய்து, சம்மன் அனுப்பப்பட்டு நீதிமன்றம் மூலம் அபராதம் செலுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தலைக்கவசம் அணியும் விவகாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அபராதம் விதிக்க கூடாது என முதல்வர் நாராயண்சாமியின் வேண்டுகோள் புறந்தள்ளப்பட்டு துணைநிலை ஆளுநரின் உத்தரவே செயல்படுத்தப்படுகின்றது.
அதேசமயம் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் என பல்வேறு பணியின் காரணமாக அலைக்கழிக்க விரும்பாமல், சம்மன் அனுப்பி நீதிமன்றம் மூலம் அபராதம் செலுத்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இரண்டு நாள் முன்பு கிரண்பேடி சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தினார்.