Skip to main content

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்...மனிதநேயத்தோடு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்த இன்ஸ்பெக்டர்!!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

கடந்த ஆண்டு நவம்பர் 16 ந் தேதி தமிழகத்தையே புரட்டிப்போட்ட கஜா புயலின் தாக்கம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்ட மக்களை இன்னும் எழும்பவிடவில்லை. விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். அரசு பள்ளிகள், அலுவலகங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. அனைவரையும் நடைபிணமாக வாழ வைத்துவிட்டது கஜா புயல்.

police helps mentally ill woman


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பேப்பர் மில் ரோடு கடைவீதியில் டீ கடை நடத்தி வந்த கணவரை இழந்த பரமநகரைச் சேர்ந்த சாவித்திரிக்கு 4 மகள்கள். 3 மகள்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டாலும் ஒரு மகளை கரை ஏற்ற வேண்டும் என்று டீ கடையை தொடர்ந்து நடத்தினார். ஆனால் கஜா புயல் கடையையும், வீட்டையும் உடைத்து தூக்கி எரிந்துவிட்டது. உடமைகள் அத்தனையும் தண்ணீரிலும், காற்றிலும் காணாமல் போனது. 

இதை நினைத்து நினைத்து சாவித்திரி அழ.. தாயின் கண்ணீரை துடைக்க பள்ளிப் படிப்பை முடித்த மகள் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றார். ஆனால் தாயால் இதனை எல்லாம் சீரணிக்க முடியவில்லை. பலவற்றையும் நினைத்து குழப்பத்தில் தானாக பேசிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டது. 

பகலில் ஓரிடத்தில் இருந்தாலும் இரவில் கிராமத்தை சுற்றி தன்னிலை குறித்து வீடு வீடாக பேசினார். கண்ணில் கண்டதை எடுத்து உடைத்தார். இப்படித்தான் இரவு ரோந்து சென்ற வடகாடு இன்ஸ்பெக்டர் பரத் ஸ்ரீனிவாஸ் கண்ணில் பட அவரைப் பற்றி விசாரிக்க கஜா புயலில் அனைத்தையும் இழந்து மனிநிலையும் பாதிக்கப்பட்டதை சொன்னார்கள்.

நேற்று இவரை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தவர், இப்படி பாதிக்கப்பட்டவரை உறவினர்கள் எப்படி வைத்து பாதுகாக்க முடியும் என்று புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகத்திடம் இது பற்றி பேசி அவரை சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். மருத்தவர் கார்த்திக் தெய்வநாயம் விடுப்பில் இருந்தாலும் சக மருத்துவர்களிடம் பேசி சாவித்திரியை சிகிச்சைக்கு அனுமதிக்க கேட்டுக் கொண்டார். அதன் பிறகு உறவினர் வீட்டில் இருந்த சாவித்திரியை கொத்தமங்கலம் இளைஞர் முத்துவின் உதவியுடன் வாடகை கார் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

இது குறித்து உறவினர்கள் கூறும் போது "கணவரும் இல்லை. கஜா புயல் கடை, வீடு அத்தனையும் கொண்டு போய் விட்டது. ஒரு மகள் மட்டும் இருக்கிறாள். அவளை கரைசேர்க்க முடியுமா என்று நினைத்தே இப்படி மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார். புயலுக்கு பிறகு குடியிருக்க ஒரு கொட்டகை கூட கட்ட முடியவில்லை. அதனால் உறவினர்கள் வீட்டில் தான் தங்கி இருந்தார். இரவில் எங்காவது சென்றுவிடுவார். அப்படி தான் போலீசார் பிடித்து வந்து ஒப்படைத்தார்கள். இப்ப சிகிச்சைக்கும் அனுப்புகிறார்கள்.


அதனால் அரசாங்கம் சாவித்திரிக்கு ஒரு வீடு கட்டிக் கொடுப்பதுடன் மறுபடியும் கடை நடத்த கடன் உதவியும் செய்து கொடுத்தால் சிகிச்சைக்கு பிறகு பாதுகாப்பாக இருப்பார்கள்" என்றனர். கஜா புயல் உடமைகளை அழித்து மனநிலையும் பாதிக்க செய்துவிட்டது. அரசாங்கம் நினைத்தால் அந்த பெண்ணை நலமாக்கி வாழ வைக்கலாம்.
            
    
 

 

சார்ந்த செய்திகள்