வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, கள்ளச்சாராயம் காய்ச்சி லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில் மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.
அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.
காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.