ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் பேரணியாய் சென்றதில் போலீசாரின் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியால் 13 பேர் பலியானார்கள். காயம்பட்டவர்கள் மற்றும் மரணமடைந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் சொல்வதற்காக இன்று தூத்துக்குடி வந்த சி.பி.எம்.மின் தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மருத்துவமனை மற்றும் அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆறுதல் கூறினார். அவருடன் மாவட்ட செ. அர்ச்சுனன் மற்றும் சி.பி.எம். பொறுப்பாளர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முத்து ஆகியோர் உடன் சென்றனர்.
பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, ’’ஆலையை எதிர்த்து போராடும் மக்களை ஒடுக்கும் நோக்கில் தான் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். போராட்டக்காரர்களை கொன்று குவிக்கும் நோக்கில் தான் துப்பாக்கி சூடு நடந்தது. கலவரத்தை ஒடுக்க போலீஸார் முறையான வழிகளை பின்பற்றாமல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். சரியான வழிமுறையை பின்பற்றினால் போலீஸாரும் காயமடைந்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஏதும் காயங்கள் இல்லை. கலவரத்தின் போது பணியிலிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகே நீதி விசாரணை துவக்க வேண்டும். எஸ்.பி., கலெக்டர் ஆகியோரை பணிமாற்றம் செய்திருப்பது மட்டும் தீர்வாகாது. கடந்த 4 ஆண்டுகளில் சாதாரண பொதுமக்கள் உயிரிழந்த போது எந்த வித இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்ததில்லை. தூத்துக்குடி சம்பவத்தில் இதுவரை அவர் இரங்கல் தெரிவிக்காதது எந்த ஒரு ஆச்சர்யமும் கிடையாது’’ என்றார்.