Skip to main content

கார் கொடுத்தது அங்க, காசு கொடுத்தது இங்க, நான் புகார் கொடுக்கிறது எங்க? - பெண்ணை அலைக்கழித்த போலீஸ்

Published on 30/07/2024 | Edited on 30/07/2024
police did not act on the woman's complaint

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த மஞ்சு (37) என்பவரின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்து உள்ளார். 2 பெண் பிள்ளைகள், 1 ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் மஞ்சு திருப்பத்தூரில் உள்ள தனியார் துணிக் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் வாங்கி உள்ளார். பின்னாளில் பிள்ளைகளின் படிப்பிற்காக தன்னுடன் பணியாற்றும் தில்லை நகரைச் சேர்ந்த கமலக்கண்ணன்(35)  என்பவரிடம், எனது காரை வைத்துக் கொண்டு காசு தரும் நபர் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். கமலக்கண்ணன் காரை பெற்றுக் கொண்டு வேறொரு நபரிடம் அடகு வைத்துவிட்டு பணத்தைக் கொடுத்துள்ளார். கடைசி வரை காரை யாரிடம் வைத்து உள்ளார் என்ற விவரம் கூறாமல் இருந்துள்ளார். இருப்பினும் அவ்வப்போது காருக்கு கொடுக்கும் பணத்தை அவரிடம் கொடுத்து காரை மீட்டு தரும்படி மஞ்சு கூறி உள்ளார். ஆனால், கமலக்கண்ணன் பணத்தைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட நபரிடம் கொடுக்காமல் இருந்துள்ளார். பின்பு காரை இப்போது தருகிறேன் அப்போது தருகிறேன் என்று அலைக்கழித்துள்ளார்.

ஒருகட்டத்தில் கார் அடகு வைத்த நபர் விற்பனை செய்து விட்டார் என்று கூறியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த மஞ்சு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருப்பத்தூர் காவல் நிலையத்தில் கார் எங்கு கொடுக்கப்பட்டது என்று கேட்டுள்ளனர். ஜோலார்பேட்டை வக்கணம்பட்டியில் கார் கொடுத்ததால் நீங்கள் புகார் அங்கு தான் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர் ஜோலார்பேட்டை காவல் நிலையம் சென்று புகார் அளித்த போது, பணம் நீங்கள் எங்கு கொடுத்தீர்கள் அங்கு தான் நீங்கள் புகார் அளிக்க வேண்டும் என்று கூறி தட்டி கழித்து உள்ளனர். 

இதனால் மன உளைச்சல் அடைந்த மஞ்சு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு மாத்திரை சாப்பிட்டுச் சென்றுள்ளார். அப்போது மயக்கம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர். அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் மஞ்சுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரைப் பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

சார்ந்த செய்திகள்