
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சுங்கச்சாவடி அருகே திருவெறும்பூர் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு, ‘ஒரு கார் நிற்காமல் வருவதாகவும் அந்தக் காரின் எண்ணைக் குறிப்பிட்டு, அதனை மடக்கிப் பிடிக்க’வும் உத்தரவு வந்துள்ளது.
அதன்பேரில் தஞ்சை - திருச்சி சாலையில், துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வந்த காரை நிறுத்த காவலர்கள் முயன்றுள்ளனர். ஆனால் கார் நிற்காமல், வாகன தணிக்கையில் இருந்த காவலர்கள் மீது மோதுவது போல் வந்து தற்காலிகத் தடுப்புச் சுவரைத் தள்ளிவிட்டு கடந்து சென்றுள்ளது.
இதில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் மீது தற்காலிக தடுப்புச்சுவர் விழுந்து அவர் காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து துவாக்குடி காவல் நிலையத்தில் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, காரை ஓட்டிவந்த மர்ம நபரையும் காரையும் தேடிவருகின்றனர்.