Skip to main content

எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு காவல்துறை மறுப்பு!

Published on 04/11/2024 | Edited on 04/11/2024
Police deny for Edappadi Palaniswami accusation

மதுரை மாவட்டம் கூடல் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 38). இவர் சென்னை மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில்  உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர். இவர், திருவொற்றியூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இதே காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொசுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நித்தியா (வயது 35) என்பவரும் காவலராக பணிபுரிந்து வந்தார். விடுப்பில் இருந்த இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் பின்னால் வந்த கார் ஒன்று, இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவத்திலேயே காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண் காவலர் நித்தியாவை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இதனை அடுத்து உதவி ஆய்வாளரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கும், பெண் காவலரின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்குக் காரணமான கார் ஓட்டுநர் மதன்குமார் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளரும், பெண் காவலர் உயிரிழந்த நிகழ்வு சக காவலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் காவல்துறையினருக்கு, குறிப்பாகப் பெண் காவலர்களுக்கு எந்தவித வசதியும் செய்து தராத இந்த திமுக அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாதவரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் பெண் காவலர் நித்யா ஆகிய இருவரும் ஒரு வழக்கு தொடர்பாகக் குற்றவாளியைப் பிடிக்க செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்றுள்ளனர். மதுராந்தகத்தில் இருவரும் இருசக்கர வாகனத்தில் குற்றவாளிகளைத் தேடிச் சென்றபோது சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இருந்து அவர்கள் இருவரும் எப்படிச் சென்றார்கள் என்று தெரியாத நிலையில் மதுராந்தகம் காவல்துறையினரும் அவர்கள் இருவருக்கும் வேண்டிய வாகன வசதிகளைச் செய்து தராதது கண்டிக்கத்தக்கதாகும். இந்த அரசின் அஜாக்கிரதையால் பணியின்போது உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென்றும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குக் கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென்றும், இனிமேலும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

Police deny for Edappadi Palaniswami accusation

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இது பொய்யான தகவல். 'பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர் ஆகிய இருவரும் அலுவல் நிமித்தமாகச் செல்லவில்லை. குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற போது விபத்து ஏற்பட்டதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை' என்று ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் விளக்கமளித்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்