விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள ஞானோதயம் சோதனைச் சாவடியில் வளத்தி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடக்கிலிருந்து செஞ்சி நோக்கி சொகுசு பேருந்து ஒன்று மிக வேகமாக வந்தது. போலீசார் அதை மடக்கி நிறுத்தியபோது அந்தப் பஸ் நிற்காமல் மிக வேகமாக சென்றுள்ளது. அந்தப் பஸ்ஸை சேசிங் மூலம் துரத்திச் சென்ற போலீசார் கூடுவாம்பூண்டி என்ற இடத்தில் பேருந்தை மடக்கிப்பிடித்தனர். அதிலிருந்து இறங்கி தப்பி ஓட முற்பட்ட ஓட்டுநர் நடராஜ் என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அந்தப் பஸ்ஸில் ஏறி சோதனை செய்தபோது, அந்தப் பஸ்ஸில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட கஞ்சா பார்சல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதே பகுதியில் மது பாட்டில்களின் பார்சல்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்குத் தகவல் அளித்தனர். அவர் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து பார்வையிட்டதோடு, சொகுசு பஸ்ஸில் கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் கஞ்சாவின் மதிப்பு சுமார் 10 லட்சம் என்று தெரிவித்தார். மேலும், சொகுசு பஸ் டிரைவர் நடராஜனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் அந்த டிரைவர் நடராஜ் பீகாரில் இருந்துவந்த கஞ்சாவும் மதுபாட்டில்களையும் கடத்திவருவதாக தெரிவித்துள்ளார்.
இதை மதுரையில் கொண்டு சென்று டெலிவரி செய்யுமாறு கூறி அங்கிருந்து அனுப்பிவைத்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கஞ்சா, மது பாட்டில்கள் கடத்திக் கொண்டுவரப்பட்ட சொகுசு பேருந்து வாகன சோதனை மையத்தில் நிற்காமல் சென்றதைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து கஞ்சா, மது பாட்டில்கள் ஆகியவற்றைக் கைப்பற்றிய போலீசாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார். கடந்த சில நாட்களாக தமிழ்நாடு அரசு கரோனா பரவல் காரணமாக பொதுப் போக்குவரத்து தடை போடப்பட்டுள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, போதை தரும் புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் கடத்தல் சம்பவம் தினசரி நடைபெற்றுவருகிறது. மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது போதை ஆசாமிகளின் ஆசையைத் தீர்த்து வைப்பதற்காக இப்படி வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, மது, போதைதரும் புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
போலீசாரும் அவர்களை மடக்கிப்பிடித்து பறிமுதல் செய்துவருகிறார்கள். இதோடு சில கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலையும் ஆரம்பித்துள்ளனர். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, எதையாவது குடித்து போதை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று துடிக்கும் ஆசாமிகளைக் குறிவைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடத்தல் சரக்கைக் கொண்டுவரும் செயல்பாட்டில் வேகமெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.