மத்திய பிரதேசம் மாநிம் கஜூரஹோ நகரைச் சேர்ந்தவர் ரோஹித் வால்மீகி. இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். துப்புரவுப் பணியாளராக இருந்துவரும் இவர் கடந்த 18 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, எதிரே சென்ற காவல்துறை மற்றும் மின்சாரத் துறையின் வாகனத்தை முந்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரோஹித்தை நிறுத்திய காவல்துறையினர், வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கியதாகக் கூறி அவரைத் தாக்கி விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்பு ரோஹித்தை காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கி நிர்வாணப்படுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த ரோஹித் வீட்டிற்குச் சென்றதும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் ரோஹித்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினர். இதனைத் தொடர்ந்து தன்னை தாக்கிய போலீசார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, “புகார் தொடர்பாக உரிய விசாரணை நடந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்று சத்தர்பூர் காவல் கண்காணிப்பாளர் அகம் ஜெயின் தெரிவித்துள்ளார்.