Skip to main content

மோசடி குற்றவாளியை கேரளாவில் பிடிக்க சென்ற புதுவை போலீசார் மீது தாக்குதல்!

Published on 23/06/2018 | Edited on 23/06/2018
vans


புதுச்சேரி அண்ணாநகரை சேர்ந்தவர் வினித்ஜெலன் (30). இவர் மேட்டுப்பாளையத்தில் பேக்கேஜிங் கவர் கம்பெனி நடத்திவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த பினு மற்றும் அவரது சகோதரர்கள் பிஜூ, சஜூ ஆகியோர் வினித்தை சந்தித்து கேரளாவில் மொத்தமாக பேக்கேஜிங் கவர் விற்பனை செய்வதாக கூறினர். இதையடுத்து வினித் ஜெலன் பலமுறை பேக்கேஜிங் கவர் கொடுத்துள்ளார். அதற்கான பணமும் அவர்கள் கொடுத்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் 38 லட்சம் மதிப்பிலான பேக்கேஜிங் கவர்களை வினித் அனுப்பிவைத்தார். ஆனால் அதற்கான பணத்தை பினு சகோதரர்கள் அனுப்பவில்லை. பலமுறை கேட்டும் கிடைக்கவில்லை. அதன்பின் அவர்கள் வினித்ஜெலனுக்கு கொலைமிரட்டல் விடுத்தனர். இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வினித்ஜெலன் இந்த மோசடி சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் 11-4-2018 அன்று புகார் கொடுத்தார்.

 

 

வினித்ஜெலன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த மேட்டுப்பாளையம் போலீசார், சீட்டிங் சகோதரர்களை தேடி சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் ராஜீ, ராஜவேலு, ஜெயகுமார், மூவரசன், டிரைவர் சசீதரன் ஆகியோருடன் கேரளாவுக்கு நேற்று முன்தினம் போலீஸார் வேனில் புறப்பட்டனர். நேற்று காலை எர்ணாகுளம் மாவட்டம் புத்தன்குரூஸ் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள ஒரு கம்பெனியில் இருந்த பினுவை போலீசார் பிடித்தனர்.
  van


பின்னர் அவரை போலீஸ்வேனில் ஏற்றினர். வேன் புறப்பட தயாரானபோது திடீரென வேனின் முன்னும் பின்னும் ஜீப் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கியவர்கள் பினுவை விடுமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் வேனை லாக்செய்து விட்டு இறங்கினர். அப்போது பினுவின் ஆதரவாளர்கள் போலீசாரை பிடித்து தள்ளி தாக்கினர். பின்னர் போலீஸ் வாகனத்தின்மீது கல்லை எடுத்து எறிந்தனர்.

இதில் வேனின் முன், பின், சைடு கண்ணாடிகள் அனைத்தும் நொறுங்கியது. பின்னர் அவர்கள் பினுவை அழைத்து சென்றனர்.  போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் மீது தாக்குதல் நடத்தியதை அறிந்தும் கேரளா போலீசார் புதுச்சேரி போலீசாருக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
 

van


அதேசமயம் புதுச்சேரி போலீசாரிடம் பல கேள்விகளை கேட்டுள்ளனர். பின்னர் காயம் அடைந்த போலீசார் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து புதுச்சேரி போலீசார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

சார்ந்த செய்திகள்