அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழக நிறுவனரும், வழக்கறிஞருமான பொன்.முருகேசன் இன்று செய்தியாளா்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு இயக்கமாக ஆரம்பித்து, வளா்ச்சி அடைந்து, கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியத் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்தது அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழகம். மேலும் எங்களுடைய விருப்பபடி 'செருப்பு' சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இன்றுவரை நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருந்து வருகிறோம். இந்தமுறை நாங்கள் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அந்தத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கேட்டிருக்கிறோம். அவா்கள் எங்களுக்கு ஒதுக்கும் பட்சத்தில், நாங்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம். ஒதுக்கவில்லை என்றால் நாங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 'செருப்பு' சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவோம்" என்று தெரிவித்தார்.
மேலும், "துறையூா் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் வரை தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் உள்ளது. எனவே அவா்கள் என்னை இந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த உள்ளனர். கண்டிப்பாக நான் வெற்றி பெருவேன் என்று தெரிவித்தார். மேலும், தோ்தல் செலவிற்கான பண பலம், ஆள் பலம் அனைத்தும் எங்களிடம் உள்ளது.
அதிமுகவும், திமுகவும் ஒரு மாயையை ஏற்படுத்தி வரக்கூடிய கட்சிகள் தான் நாங்கள் இல்லாமல் அவா்கள் இல்லை. எங்களுடைய மக்களுக்குத் தேவையானதை நாங்கள்தான் செய்ய வேண்டும். தேவேந்திர குல வேளாளரை எஸ்.சி. பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி வருகிறோம். ஆனால் யாரும் அதைப் பேச முன்வரவில்லை. துறையூா் சட்டமன்றத் தொகுதியில் முறையாக எந்தவித நலத்திட்டங்களும், முன்னேற்றங்களும் செய்யப்படவில்லை.
கடந்த முறை அதிமுக இருந்தது, தற்போது திமுக சார்பில் ஸ்டாலின் குமார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆளுங்கட்சி அதிமுகவாக இருக்கும் போது திமுகவால் எந்த நலத்திட்டங்களையும் செய்ய முடியாது. எனவே, எங்களுடைய மக்களுக்கு நாங்கள்தான் நல்லது செய்யமுடியும்" என்று தெரிவித்தார். அதன்பின் அவா் தங்களுடைய சின்னமான 'செருப்பு' சின்னத்தைக் கையில் எடுத்துச் சின்னத்தை வெளியிட்டார்.
சின்னத்தை வெளியிட்டுப் பேசிய அவர், "டெல்லியில் எப்படித் துடைப்பம் வெற்றி பெற்றதோ, அதேபோல செருப்பும் இந்தமுறை துறையூரில் வெல்லும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் எங்கெல்லாம் தேவேந்திரகுலம் சார்ந்த வேட்பாளா்கள் நிறுத்தப்படுகிறார்களோ, அவா்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவுள்ளோம். கிராமங்கள் தோறும் நேரடியாகச் சென்று அவர்களைச் சந்தித்து, ஓலை அனுப்பி அவா்களிடம் வாக்கு சேகரிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.