திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போதைப் பொருட்கள், மதுபாட்டில்கள் மற்றும் தங்க நகைகள் கடத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்கும் பணியில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் (01.09.2021) ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த வாசுதேவன், வீரகுமார், கலைச்செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ராமேஸ்வரத்திற்குச் செல்லும் விரைவு ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள ஐந்தாவது நடைமேடைக்கு மாலை 3 மணிக்கு வந்து சேர்ந்தது.
அப்போது ரயிலில் இருந்து இறங்கிவரும் பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை குழுவினர் கண்காணித்துவந்தனர். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் 7 சிறுவர்களை ரயிலில் இருந்து அழைத்துச் சென்றதைக் கவனித்த காவலர்கள், அவர்கள் அனைவரையும் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வட மாநிலமான உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து 13 வயது முதல் 16 வயதுடைய சிறுவர்கள் 20 பேரை கட்டட வேலைக்காக கொத்தடிமைகளாக கடத்திவருவது தெரியவந்தது. அவர்களில் 13 சிறுவர்கள் கட்டட வேலைக்காக வேறு பெட்டியில் பயணித்து இறங்கிச் சென்றுவிட்டது கண்டறியப்பட்டது.
அதைத்தொடர்ந்து 7 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். மேலும், சிறுவர்களைக் கடத்த உடந்தையாக இருந்த ஏஜென்டுகளான ஆள் கடத்தல்காரர்கள் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் , ஷிவ் பகுஜன், சதீஷ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். கடத்தல்காரர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் திருச்சி, முசிறி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் கட்டட வேலைக்கு அழைத்துவருவதாக கடத்தல்காரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், எஞ்சிய 13 சிறுவர்களை மீட்கும் முயற்சியில் தற்போது காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.