கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிக்கு அருகே உள்ள கோகுல் நகர்ப் பகுதி 16-ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலங்களை வாங்கி அதில் வீடுகள் கட்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் குலுக்கல் முறையில் விற்பனை நடைபெற்ற நிலத்தை, சிலர் போலியாக ஆவணங்கள் தயாரித்து சுமார் மூன்றரை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக, வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கருக்கு புகார் வந்தது. அப்போது அவர் மேற்கொண்ட ஆய்வில், வீட்டு மனைகளில் மோசடி நடந்திருப்பது உண்மை எனத் தெரிய வந்தது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கர், கிருஷ்ணகிரி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார், குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜா ரவி தங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, எஸ்ஐ மஞ்சுநாத் உள்ளிட்டோர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், 3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வீட்டு வசதி வாரிய நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில், ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலரான ஆராவமுது என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த முறைகேடு சம்பவத்தில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மதி என்கிற மதியழகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஓசூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், டேனியல், ஸ்ரீதர், முருகதாஸ், ஆனந்த் உட்பட மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 62 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில், முதலில் கைது செய்யப்பட்ட ஆராவமுது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்துள்ளார். இரண்டாவதாக கைது செய்யப்பட்ட மதி என்கிற மதியழகன் ஏற்கனவே ஈரோடு பகுதியில் ஈமு கோழி விற்பனை வழக்கில் கைதாகி 10 வருடம் சிறைத் தண்டனை பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவர்கள் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி கிளைச் சிறைகளில் அடைத்தனர். தற்போது, இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், வீட்டுவசதி வாரிய நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் உதவி வருவாய் அலுவலர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.