திருச்சி மாநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக ரயில் நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளிடம் அவர்களது உடமைகள், கையில் வைத்திருக்கக் கூடிய கைப்பைகள், நகை, பணம், ஃபோன் உள்ளிட்ட அனைத்தையும் கொள்ளையடித்துச் செல்லக்கூடிய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், நேற்று (27.04.2021) காலை கருமண்டபம், ஜெயா நகர்ப் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து, 40 சவரன் நகை மற்றும் லட்சக்கணக்கான பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் நடந்தது.
இந்த சம்பவம் நடந்து முடிந்த 24 மணி நேரத்திற்குள், அரிஸ்டோ ரவுண்டானா என்று சொல்லப்படும் 5 சாலைகள் சந்திக்கக்கூடிய இடத்தில், கார் ஓட்டுநர் ஒருவரை வழிமறித்து அவரிடமிருந்த ரூ. 3,000 பணத்தைப் பிடுங்கிக்கொண்டு அவரை அடித்துத் துரத்தியுள்ளது ஒரு கும்பல். இந்த சம்பவம் குறித்து கார் ஓட்டுநர் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில், அப்பகுதி அருகில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தின் ஒட்டியிருந்த புதரில் கொள்ளையடித்த நான்கு பேரும் மறைந்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அவர்களைப் பிடிக்க காவல்துறை முற்பட்டபோது, அந்த நான்கு பேரும் நான்கு திசைக்குப் பிரிந்து ஓடியுள்ளனர். அதில், ஒருவரை மட்டும் காவல்துறையினர் இரவோடு இரவாக கைது செய்தனர். காவல்துறையில் சிக்கியவர் திருவரம்பூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. வெங்கடேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருப்பத்தூர் குளத்தூர்பட்டியைச் சேர்ந்த நாகராஜ், திருச்சி கருமண்டபம் குளத்தைச் சேர்ந்த பாபு, நாகமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என மூவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த மூன்று பேரும், ரயில்வே ஜங்சன் பகுதியில் ஒரே இடத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்தனர். உறங்கிக்கொண்டிருந்த அவர்களைக் காவல்துறையினர் தட்டி எழுப்பி, கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பல மாதங்களாக இதுபோன்ற வழிப்பறி, பயணிகளைத் திசை திருப்பி கொள்ளையடிப்பது மற்றும் ரயில் நிலையங்களில் கொள்ளையடிப்பது உள்ளிட்ட சம்பவங்களை தொடர்ந்து நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.