அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ளது வரதராஜன்பேட்டை. இங்கு கிறிஸ்தவ நிறுவனத்திற்கு சொந்தமான பள்ளிகள், கல்லூரிகள் நல்ல முறையில் சிறப்பாக இயங்கி வருகின்றன. இங்கு படித்த மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக, சிறந்த அதிகாரிகளாக, அறிஞர்களாக விளங்கிவருகிறார்கள். இங்குள்ள தென்போஸ்கோ பள்ளியின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவையொட்டி 1971-ஆம் ஆண்டு இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஒரு விழாவாகவே பள்ளி நிர்வாகம் நடத்தியது. இந்த விழாவில் சலேசிய மாநிலத் தலைவர் அகிலன், பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் கமாலியேல், பாதிரியார் ஆரோக்கியராஜ், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவராக இருந்து இன்று தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் சிவசங்கர் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “இந்தப் பள்ளியில் படித்த காலத்தில் கற்றுக் கொண்ட பண்பு, மரியாதை, துன்பப்படும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பான்மை ஆகியவற்றைப் பின்பற்றி நடந்துவருகிறேன். இந்த பள்ளியின் மாணவன் என்பதில் எப்போதும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அமைச்சர் என்பதையும் தாண்டி இந்த பள்ளிக்காக என்னை எப்போது அழைத்தாலும் வருவதற்கும், உங்களைச் சந்திப்பதற்கும் ஆவலாக உள்ளேன். அதேபோன்று இங்கு உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவிகள் பல்வேறு துறைகளுக்கு சிறந்த திறமைசாலிகளாக விளங்குகிறார்கள்.
இப்படி மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தப் பள்ளி நிறுவனத்திற்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்களாக இருந்து பலர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருபவர்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்வம், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஜேசுதாஸ், தனியார் துறையில் சிறந்து விளங்கி வரும் சத்தியசீலன், சண்முக வடிவேல், ஜேம்ஸ் கென்னடி உட்பட பலர் கலந்து கொண்டு உரையாடி மகிழ்ந்தனர். விழா ஏற்பாடுகளை தென் போஸ்கோ கல்வி நிறுவனம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.