காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டக் குழுவினர் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டக் குழுவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னைக்கான இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்ட அமைப்புகள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அலுவலகம் பொன்னேரிக்கரை பகுதியில் அமைக்கப்பட்டு நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று நிலம் எடுக்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் டிராக்டர்களில் படையெடுக்க ஆயத்தமான நிலையில், போலீசார் தடுத்ததால் திடீரென சிலர் சாலையிலேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராகப் போராடிய 137 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 137 பேர் மீது மூன்று பிரிவுகளில் சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூட்டம் கூடுவது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.