விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில், கடந்த 12.02.2021 அன்று பிற்பகலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு அறைகள் தரைமட்டமான நிலையில் 20 பேர் உயிரிழந்தனர்.
திடீரென ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் 30க்கும் அதிகமானோருக்குப் பலத்த காயமும், பலருக்கு 80% தீக்காயமும் ஏற்பட்டது. இந்த விபத்து சம்பவத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், 7 மாத கர்ப்பிணி பெண் உட்பட 20 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 7 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் ஏழு பேரையும் கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி பட்டாசு ஆலையின் குத்தகைதாரர் பொண்ணுபாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி மற்றொரு குத்தகைதாரரான சக்திவேல், அவரது மனைவி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி இன்று (18.02.2021) அதிகாலை கைது செய்யப்பட்டிருக்கிறார். தற்போது ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் 4 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர்.