சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்ற ரயிலில் கூட்ட நெருக்கடி அதிகம் என்பதால் படிக்கட்டில் தொங்கியபடி ஏராளமானோர் சென்றனர். இப்படி பயணம் செய்தவர்கள் பரங்கிமலை ரயில்நிலையத்தை கடந்தபோது பக்கவாட்டு தடுப்புச்சுவற்றில் மோதினர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை அடுதுது பெரம்பூர் சதீஷ் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், கடந்த செவ்வாயன்று புறநகர் மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணித்தவர்கள், பரங்கிமலையில் தடுப்புக் கட்டைகளில் மோதி 5 பேர் பலியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறியிருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய மெட்ரோ ரயில்களைப் போல தானியங்கி மூடும் கதவுகளை புறநகர் மற்றும் பறக்கும் ரயில்களில் பொருத்த உத்தரவிடுமாறு’ கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வேணுகோபால், நிர்மல்குமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முக்கியத்துவம் கருதி, ரயில்வே துறை, தெற்கு ரயில்வே பொது மேலாளர், தலைமைச்செயலாளர், டிஜிபி ஆகியோர் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் விரைந்து பதிலளிக்க நீதிபதிகள் ஆணையிட்டனர்.