கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆற்றுப்பாதை தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்குத் திருமணமாகி 9 மாதங்கள்தான் ஆகின்றன. இந்த நிலையில், தண்டபாணிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துவந்ததாகவும் திருமணத்திற்குப் பிறகும் அவர்களுக்கிடையே பழக்கம் தொடர்ந்துள்ளதாகவும், அதை மறைத்து அவர் லட்சுமியை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு கணவரின் மற்றொரு பெண்ணுடனான தொடர்பை அறிந்த லட்சுமி, கணவரைக் கண்டித்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (27.06.2021) இரவு தம்பதிக்கிடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த லட்சுமி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்துக்கொண்டு அவரது வீட்டுக்கு அருகில் இருந்த கால்நடை மருத்துவமனை பின்புறம் உள்ள மறைவான பகுதிக்குச் சென்று, தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததும் அலறி சத்தம் போட்டுள்ளார். அவர் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது லட்சுமி கடுமையான தீக்காயங்களுடன் அந்த இடத்திலேயே கீழே விழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து லட்சுமியின் தாயார் உண்ணாமலை சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து லட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
திருமணமாகி 9 மாதத்திலேயே லட்சுமி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் விசாரணைக்கும் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். திருமணமான 9 மாதத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சங்கராபுரம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.