அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகிலுள்ளது நெல்லித்தோப்பு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பால குரு என்பவரது மகன் வசந்தகுமார்(21). இவர் உறவினர் சக்திவேல் என்பவருடன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ள கொடிக்களம் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சேம்பரில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் ஆவினங்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் சிறுமியை கடத்திச் சென்றதாக வசந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர் தினசரி ஆவினங்குடி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தினசரி ஆவினன்குடி காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வந்த வசந்தகுமார் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு நேரடியாக அவர் ஏற்கனவே வேலை செய்து வந்த செங்கல் சூளை சேம்பருக்கு சென்றுள்ளார்.
பிறகு மாலை தனது சொந்த ஊரான நெல்லித்தோப்பு செல்வதாக தனது உறவினர் சக்திவேல் இடம் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால் அவரது சொந்த ஊருக்குச் செல்ல தயங்கிய வசந்தகுமார் அதிகாலை 3 மணி அளவில் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி உள்ளார். இது குறித்த தகவல் ஆவினங்குடி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வசந்தகுமாரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வசந்தகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வசந்தகுமாரின் தாயார் சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வசந்தகுமார் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.