வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி, டிசம்பர் முதல் வாரம் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சண்முகம் ஆஜராகி, ‘4 நாட்கள் போராட்டத்துடன் முடிந்துவிடவில்லை. கிராம நிர்வாக அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்த, வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, போராட்டத்தில் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக காவல்துறை வழக்கு மட்டுமே பதிந்துள்ளது. முன்னெச்சரிக்கை கைது ஏதும் செய்யவில்லை.
நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு கோரி, இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட உயர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.’ என வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ‘குற்ற விசாரணை நடைமுறைப்படி, முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கையில் ஈடுபட, காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதற்காக, தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது.
அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான தருணம் இது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் காவல்துறை செயல்படும் என எதிர்பார்க்கிறோம்.‘ எனத் தெரிவித்தனர்.
போராட்டத்தின்போது, ரயில் மீது கல்லெறிந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், இவ்வழக்கில், தெற்கு ரயில்வே பொது மேலாளரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராகச் சேர்த்தனர்.
பின்னர், மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகள், தெற்கு ரயில்வே, வன்னியர் சங்கம், பா.ம.க ஆகியவற்றுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 12-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.