வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை தனது தலைமையில் முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான பாக்கம் இராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கல்வியிலும் சமூகத்திலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமூகத்தை முன்னேற்றும் நோக்குடன் 1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் திண்டிவனத்தில் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போது, அதற்கான கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பாக்கம் இராமகிருஷ்ணனும் ஒருவர். தமிழகத்தின் பல பகுதிகளில் செயல்பட்டு வந்த 28 வன்னியர் அமைப்புகளை ஒருங்கிணைத்து தான் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட 28 சங்கங்களில் பாக்கம் இராமகிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்டு வந்த வன்னியர் சங்கமும் ஒன்றாகும். அதன்பின்னர் வன்னியர் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் வன்னியர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் இறுதிவரை பாடுபட்டவர் அவர்.
வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஏராளமான போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றவர். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்காக 25.11.1987-ஆம் நாள் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தலைமையில் நடைபெற்ற பேச்சுகளில் என்னுடன் கலந்துகொண்டவர். இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் தாக்குதலுக்கும் இன்னுயிரை தியாகம் செய்த ஈகியர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்டவர் பாக்கம் இராமகிருஷ்ணன்.
1989-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது அதிலும் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர் அவர். பாக்கம் இராமகிருஷ்ணனின் மறைவு அவரது குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க.வினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.