
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வள்ளலார் முப்பெரும் விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்த நமது திமுக அரசு, ‘வாடிய பயிரை கண்டபொழுதெல்லாம் வாடினேன்’ என பாடிய வள்ளலாரின் பிறந்தநாளை தனிபெரும் கருணை நாளாக அறிவித்துள்ளது. வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள், அவர் துவங்கிய தர்ம சாலைக்கு 156 ஆண்டுகள், அவர் ஏற்றிய தீபத்திற்கு 152 ஆண்டுகள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சியை பார்த்து சிலருக்கு ஆச்சரியமாகவும், சிலருக்கு அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், என்னை பொறுத்தவரையில் சிலர் சொல்லிவரும் அவதூறுகளுக்குப் பதில் சொல்லக்கூடிய நிகழ்ச்சி.
திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மிகத்திற்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர் நாட்டிலேயே பேசி வருகின்றனர். இதில், ‘மதத்தை வைத்து பிழைக்கக்கூடிய சிலர் நாட்டிலேயே பேசி வருகின்றனர்’ என்பதை வெட்டிவிட்டு, ‘திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மிகத்திற்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது..’ என்று பேசியதை மட்டும் எடுத்து சில சமூக ஊடகங்கள் பரப்பும். அதற்கு தெளிவாக சொல்கிறேன், ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக. ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்கள் சொந்த சுய நலத்திற்கும், உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு மட்டுமே எதிரானது இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி” என்று பேசினார்.