திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக பயிற்சிப் பாசறை நடைபெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பாசறையில் 12,645 பேர் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் மேடையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''திமு கழகத்தின் தீரர்கள் கோட்டம் தான் திருச்சி. 1971 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில்தான் கலைஞர் நம்முடைய கொள்கை முழக்கங்கள் ஆன 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்; ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்; மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு உருவாக்கித் தந்தார்.
தெரிஞ்சோ தெரியாமலோ ஆளுநர் நமக்கு ஒரு பெரிய பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார். அவரை மாற்ற வேண்டும் என்றுகூட நான் சொல்ல விரும்பவில்லை அவரே இருக்கட்டும். தேர்தல் வரை அவரே இருக்கட்டும். அவர் இருந்தால் வாக்குகள் அதிகரிக்கும். அதேபோல் தேவையற்ற பிரச்சனைகளை கிளப்பி கட்சிக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கவும் கூடாது. சமூக ஊடகங்களை நல்ல நோக்கத்தோடு நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நான் இன்னும் சொல்கிறேன் நம்முடைய தொண்டர் பலத்திற்கும் கட்டமைப்பிற்கும் நிகராக தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல இந்த உலகத்திலேயே ஒரு கட்சி இருக்கிறதா? அந்த பலத்தை நாம் சமூக ஊடகங்களிலும் களத்திலும் முழுமையாக காட்ட வேண்டும். ஏனென்றால் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் என்பது மிக மிக முக்கியமான தேர்தல். யார் ஆட்சிக்கு வரணும் என்பதை விட யார் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பது தான் முக்கியம். புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 40 தொகுதிகளில் மட்டுமல்ல இந்தியா முழுக்க நமது அணி வெல்ல வேண்டும். ஏனெனில் இந்தியாவின் கட்டமைப்பை பாஜக சிதைத்து விட்டது. இதற்கு எதிர் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது'' என்றார்.