வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதையடுத்து பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கடலூர் அண்ணா பாலம் சிக்னலில் பாமக மாவட்டச் செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் திரண்ட பா.ம.கவினர் கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு 10.5% ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மாநில செயற்குழு உறுப்பினர் தனபாண்டியன் தலைமையில் பா.ம.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டங்களின் போது, வன்னியர்களுக்கு வழங்கிய உள் ஒதுக்கீட்டினை உறுதி செய்யும் வகையில் மீண்டும் தமிழக அரசு மசோதா நிறைவேற்ற வேண்டும், உச்சநீதிமன்றம் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய காரணமாக தெரிவித்த புள்ளிவிவரங்களை கணக்கீடு செய்ய தமிழக அரசு ஆணையம் பிறப்பிக்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.