கரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்க முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது தான் ஒரே தீர்வு என்பதால், தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவுக்கு பதிலாக முழு ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாளை மாலை 6.00 மணி முதல் 31-ஆம் தேதி வரை 144 தடை ஆணை பிறப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருக்கிறார். தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும். ஆனாலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை முழுமையாக தடுக்க வகை செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 18&ஆம் தேதி 158-ஆக இருந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 418 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 4 நாட்களில் நோய்ப்பரவல் 165% அதிகரித்திருக்கிறது. இது அச்சமளிக்கும் வேகம்; இது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு இந்தியாவின் 19 மாநிலங்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ ஊரடங்கை செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்திலும் மக்கள் எவரும் வெளியில் வராத வண்ணம் தடுத்தால் தான் கொரோனா நோயை தடுக்க முடியும் என்பதால் தான், முழுமையான ஊரடங்கை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. கோரியது.
ஆனால், தமிழக அரசு குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 144-ஆவது பிரிவின்படி அத்தியாவசியமற்ற அலுவலகங்கள் மற்றும் கடைகளை மூடுவது, அனைத்து வகை போக்குவரத்தையும் ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மட்டும் மேற்கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நாளை மாலை 06.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 1897&ஆம் ஆண்டின் இந்திய தொற்றுநோய் சட்டத்தின் 2-ஆவது பிரிவை பயன்படுத்து அனைத்து மாவட்டங்களின் எல்லைகளை மூடவும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் ஆணையிட்டுள்ளது. தமிழக அரசின் ஆணையில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்த அறிவிப்பு இல்லை.
குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 144-ஆவது பிரிவை நடைமுறைப்படுத்துவதால், பொது இடங்களில் மக்கள் கூடுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. ஐந்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதை மட்டும் தான் அந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது. அதன்படி பார்த்தால் தமிழகத்தில் 5 பேர் வரை ஓரிடத்தில் கூட தடை இல்லை. இது எப்படி நோய் பரவுவதை கட்டுப்படுத்தும்?
கொரோனா நோய் உலகின் கொடிய நோய்களில் ஒன்றாகும். கொரோனா பாதிக்கப்பட்டவரின் 3 அடி சுற்றளவில் ஒருவர் இருந்தால் அவருக்கும் நோய் தொற்றிக் கொள்ளும். இதைத் தடுக்க வேண்டுமானால் பொதுமக்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுப்பது தான் சிறந்த வழியாகும். அவ்வாறு செய்ய 1897-ஆம் ஆண்டின் இந்திய தொற்றுநோய் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு தொற்றுநோயை கட்டுப்படுத்த, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி செய்ய முடியாத எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு மாநில அரசுகளுக்கு இந்த சட்டத்தின் 2&ஆவது பிரிவு வகை செய்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த சட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது இந்த சட்டத்தைப் பயன்படுத்தி முழுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக, 144 தடை சட்டத்தை பயன்படுத்தி ஓரளவு மட்டும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது நோய்ப்பரவலை தடுக்க உதவாது.
கொரோனா நோய்த்தடுப்புக்கான எந்த ஒரு நடவடிக்கையும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நாளை மாலை 6.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஒருநாள் என்பது மிக நீண்ட காலம் ஆகும். ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. ஆகவே, கொரோனா நோய் தடுப்புக்கான முழு ஊரடங்கு ஆணையை இன்று மாலை முதல் நடைமுறைப்படுத்த வசதியாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை இன்றே முடித்துக் கொள்ள அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டில் 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளையும், 11&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் வியாழக்கிழமையும் நிறைவடைகின்றன. அவற்றை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 11 மற்றும் 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மொத்தம் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். அவர்களுக்கு துணையாக வரும் பெற்றோர், தேர்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர் என இந்தத் தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் கூடுவார்கள். இது கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவுவதற்கே வழி வகுக்கும்.
எனவே, கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்க முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது தான் ஒரே தீர்வு என்பதால், தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவுக்கு பதிலாக முழு ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும். அதுவும் இன்று இரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா பரவலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு ஏற்கனவே இலவசமாக வழங்கப்படும் அரிசியுடன் கூடுதல் அளவு அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை இலவசமாக வழங்குவதுடன், முதற்கட்டமாக 3000 ரூபாயும், வாழ்வாதார இழப்பு ஏப்ரலிலும் நீடித்தால் வாரத்திற்கு ரூ.3,000 வீதமும் நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும். இது குறித்த அறிவிப்புகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று மாலை வெளியிடவிருக்கும் விரிவான அறிக்கையில் இடம்பெறச் செய்யுமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.