என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க கோரியும், சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்கள் எடுப்பதை கைவிடக் கோரியும் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து பா.ம.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். அவர் பேசுகையில், "என்.எல்.சி நிறுவனம் நிலக்கரியை தோண்டி எடுப்பதன் மூலம் நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்கு சென்று விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி நிர்வாகம் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. தற்போது பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் என்.எல்.சி. கடந்த 66 வருடங்களாக 37 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்திய என்.எல்.சி தற்போது 24 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. என்.எல்.சி நிர்வாகம் தனது சுரங்கத்திலிருந்து நீரை வெளியேற்றி மறைமுகமாக மக்களை கிராமங்களிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் இயங்கி வரும் என்.எல்.சி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
சமீபத்தில் என்.எல்.சி நிர்வாக பொறியாளர் நியமணத்தில் 299 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில், அதில் ஒருவர் கூட தமிழர் இடம் பெறாதது மாபெரும் கண்டனத்திற்குரியது. என்.எல்.சி நிர்வாகம் தனது போக்கை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடும், நிரந்தர வேலையும் வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்றால், என்.எல்.சி நிறுவனத்தை இழுத்து மூட பாமக தயாராக உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய சில எட்டப்பர்கள் என்.எல்.சி நிர்வாகத்துடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். ராணுவத்தையே கூட்டி வந்தாலும் என்.எல்.சிக்கு பூட்டு போடுவோம். இனி யாரும் ஏமாற மாட்டோம். நிலம் எடுக்க வந்தால் முடியாது எனக் கூறுங்கள். உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது. என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை. எந்த நிறுவனத்தையும் நான் வேண்டாமென்று கூறியதில்லை. ஆனால் நிலம் கொடுத்தவர்களுக்கும், மண்ணின் மைந்தர்களுக்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி தமிழகத்திற்கு தேவை இல்லை. அதனால் தான் என்.எல்.சியை இழுத்துப் பூட்டுவோம் என்று எச்சரிக்கும் விதமாக கூட்டு அடையாள பூட்டு ஒன்றை எடுத்து வந்துள்ளேன்.தொடர்ந்து என்.எல்.சி நிர்வாகம் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் உண்மையான பூட்டை எடுத்து வந்து இழுத்து மூடி போட்டு போடுவோம்" என்று எச்சரித்தார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டு வண்டியில் வந்த அன்புமணி என்.எல்.சி நிறுவனத்திற்கு பூட்டு போடும் வகையில் அடையாளமாக பெரிய பூட்டு ஒன்றை தன்னுடன் மாட்டுவண்டியில் எடுத்து வந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் புதா.அருள்மொழி, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர்கள் இரா.ரவிச்சந்திரன், ஜெ.கார்த்திகேயன், சண்.முத்துகிருஷ்ணன், செல்வ.மகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.