![Pmk alliance ?; AIADMK shocked](http://image.nakkheeran.in/cdn/farfuture/QV6w9xPYBo35_NU0-1tt0yHnLvtyQ0_4UZcSJMZ0Gi8/1709801712/sites/default/files/inline-images/zzzadsa_3.jpg)
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
தி.மு.க கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டிவரும் நிலையில் அ.தி.மு.க. அதன் கூட்டணிக்காக பாமக, தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
மறுபுறம் பாஜக கூட்டணியில் உள்ள தமாக, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரம் டி.டி.வி.தினகரனின் அமமுக, மற்றும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக நேற்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் முன்னதாக வெளியான நிலையில், தற்போது அன்புமணி ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும், இதற்காக விரைவில் டெல்லி செல்லும் அன்புமணி, மத்திய பாஜக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அதிமுக வட்டாரத்திற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தற்போது பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து பாமகவின் அன்புமணியிடம் சந்திப்பு மேற்கொண்ட நிகழ்வு நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.