தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம், பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் இன்று (02/04/2021) தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "வெற்றிவேல், வீரவேல். நீங்கள் எல்லாம் நல்லா இருக்கீங்களா?; மதுரை வந்தது மிக்க மகிழ்ச்சி. தமிழ் பண்பாட்டின் முக்கிய மையமாக மதுரை திகழ்கிறது. தமிழ்ச் சங்கம் தந்து தமிழுக்குப் பெருமை சேர்த்த நகரம் மதுரை. புண்ணிய பூமியாகவும், வீர பூமியாகவும் மதுரை மண் விளங்குகிறது. மகாத்மா காந்தியிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மண், இந்த மதுரை மண். தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரை - கொல்லம் இடையேயான போக்குவரத்து வழித்தடம் மேம்படுத்தப்பட உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்தால் அனைத்து வசதிகளும் மேம்படும். மதுரையில் மிக விரைவில் சர்வதேச தரத்தில், சரியான நடைமுறையில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும். எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு வர வேண்டும் என நினைத்தது பாஜக; காங்கிரஸ் - திமுக அல்ல. தமிழகத்தின் பாதுகாவலர்கள் போல திமுக - காங்கிரஸார் சித்திரித்துக்கொள்கிறார்கள்; அது உண்மையல்ல. தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் துவங்கப்பட உள்ளன. நாடு முழுவதும் வைஃபை சேவை விரைவில் அளிக்கப்படும்.
ஜவுளித்துறைக்கு அதிக கடனுதவி அளித்து, புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கும் உதவி வருகிறோம். 2024ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். ஜல் ஜீவன் திட்டம் மூலம் மதுரையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் நிலை ஏற்படும். விவசாயிகளுடன் இணைந்து சொட்டு நீர் பாசனம் மூலம் அதிக மகசூல் பெறும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதிக தொழிற்சாலைகளை இங்கு கொண்டு வருவதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்". இவ்வாறு பிரதமர் கூறினார்.