தமிழக அரசின் மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி வரும் 24ஆம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி மற்றும் தமிழகம் வருகிறார். புதுச்சேரியில் சர்வதேச நகரமான ஆரோவில் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்கான பொன் விழாவில் பங்கேற்க மோடிக்கு, புதுவை அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பின் படி பிரதமர் வரும் 24ஆம் தேதி புதுவை வரவுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி, முதற்கட்டமாக மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்றும், 2018-19-ம் நிதியாண்டில் முதற்கட்டமாக ஒரு லட்சம் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 24ஆம் தேதி புதுவை வரும் பிரதமர் மோடி, ஆரோவில் பொன்விழா நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் தொடக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.