வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் வீட்டில் நகை பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் வெங்கடேஷ் திண்டுக்கல் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு முன் தினம் அவரது வீட்டின் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அதிகாலையில் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே வெங்கடேசனுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் வெங்கடேசன் வெளியூரில் இருந்ததால் அவருடைய உறவினரான சரவண பாண்டியனுக்கு தெரிவித்தார். உடனே சரவணபாண்டியன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் 4 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து அவர் வெங்கடேஷிடம் தெரிவித்தார். அதன் பின் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் சரவணபாண்டியன் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர் மேலும் வெங்கடேசன் வீட்டுக்கு எதிர்புறம் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதோடு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
அது வெங்கடேசன் வீட்டுக்குள் மோப்பம் பிடித்து விட்டு அங்கிருந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வெங்கடேஷன் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இருந்தாலும் அமைச்சர் மகன் வீட்டில் நகை பணம் கொள்ளை அடித்துச் சென்றது திண்டுக்கல் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.