தமிழக சிறைகளில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து சிறைத்துறை நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இரு மாதங்களுக்கு முன்பு சென்னை பு-ழல் சிறையில் முக்கிய கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்து எல்இடி டிவி, செல்போன், சிம் கார்டுகள், ரேடியோ, மூட்டை மூட்டையாக பிரியாணி அரிசி, கஞ்சா, பான்பராக் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து மதுரை, கோவை, சேலம், பாளையங்கோட்டை ஆகிய சிறைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். புழல் சிறை சோதனை நடந்த பிறகு சேலம் மத்திய சிறையில் மட்டும் இரண்டு முறை திடீர் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
இருப்பினும், தடை செய்யப்பட்ட பொருள்கள் நடமாட்டம் இருப்பதாக மீண்டும் மீண்டும் புகார்கள் வந்ததையடுத்து இன்று (நவ. 28, 2018) காலை மீண்டும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பழனியம்மாள் மற்றும் 35 போலீசார் காலை 6 மணி முதல் 7.40 மணி வரை ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.
கைதிகளின் அறைக்குள் உள்ள கழிப்பறை தொட்டி, சிறை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி, சமையல்கூடம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். கைதிகளிடமும் சோதனை நடந்தது. ஆனாலும் இன்றைய சோதனையில் கஞ்சா, செல்போன், சிம் கார்டு உள்ளிட்ட எந்த ஒரு தடை செய்யப்பட்ட பொருள்களும் சிக்காததால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.
கடந்த அக். 28ம் தேதியன்று நடந்த இரண்டாம் கட்ட சோதனையின்போதும், சேலம் சிறைக்குள் இருந்து தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. போலீசார் சோதனைக்கு வருவதை யாராவது முன்கூட்டியே தகவல் சொல்கிறார்களா? அல்லது அலைக்கழிக்கும் நோக்கத்துடன் தடை செய்யப்பட்ட பொருள்கள் புழங்கப்படுவதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.