கிரிக்கெட்டை தவிர்த்து கால்பந்து, கபடி, ஹாக்கிக்கும் முக்கியத்துவம் அளிக்க இந்திய அரசை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிரிக்கெட்டுக்கு ஆதரவளிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பிய வண்ணம் கைபந்து, கால்பந்து விளையாடி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்,
தற்போது ரஷ்யாவில் உலக கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஆசிய அளவில் கூட தகுதி பெற முடியாத நிலையில் உள்ளது. ஆனால் மூன்று லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடுகள் கூட உலக கால்பந்து போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுகின்ற போது, 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா பங்கு பெறாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.
மத்திய மாநில அரசுகள் கால்பந்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்து விட்டனர். மக்கள் விளையாடும் கால்பந்து, கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்தாமல், உலகளவில் ஏழு நாடுகள் மட்டும் விளையாடும் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்துவது அவமானம் மிகுந்த செயலாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மத்திய மாநில அரசுகள் ஊக்கப்படுத்த பள்ளி, கல்லூரிகளில் கபடி, ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு நீதி ஒதுக்கி வீரர்களுக்கு முறையான பயிற்சியளித்து ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Published on 20/06/2018 | Edited on 20/06/2018