ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்காததை எதிர்த்து திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுகிறது என்ற தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை எழுத்து பூர்வமாக நாளை (03.01.2020) தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சில இடங்களில் எண்ணிக்கை முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் திமுக முன்னிலையில் உள்ள இடங்களில் மட்டும் முடிவுகள் அறிவிக்கப்படாததை எதிர்த்து திமுக சார்பில், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தும் முடிவுகளை வெளியிடாததால், நீதிமன்றம் தலையிட வேண்டும் என திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். தேர்தல் முடிவுகளைத் தாமதமாக அறிவிப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், இது தொடர்பாக தாக்கல் செய்யும் மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, தனி நீதிபதி சத்தியநாராயணன் முன்பு திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘சில வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரம் இல்லாத நபர்கள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட வேண்டும். பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. திமுக முன்னணி வகித்த பல இடங்களில் இதுவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை.
வெற்றி பெற்ற பல திமுக வேட்பாளர்களுக்கு இதுவரை வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சி எடுக்காமல் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை என தேர்தல் ஆணையர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது எந்த வகையில் நியாயம்? பல இடங்களில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இன்று (02.01.2020) இரவு வாக்குபெட்டிகளை மாற்ற முயற்சி நடக்கிறது.’என்று வாதிட்டார்.
மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ‘91,975 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கிராம பஞ்சாயத்து தலைவருக்கான 9624 பதவிகளுக்கு 2660 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களுக்கான 5090 பதவிகளுக்கு 909 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துக்கான 515 பதவிகளில் 3 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நடைமுறைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்து கண்காணிக்கப்படுவதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. சேலத்தில் இதுவரை 30 சதவீத முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் பொத்தம் பொதுவாகத்தான் குற்றச்சாட்டு தெரிவிக்கிறார்களே தவிர, முறைகேடு செய்ததாக யாரையும் குறிப்பிட்டு புகார் அளிக்கவில்லை.’என்று விளக்கம் அளித்தார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார். வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுகிறது என்ற தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை எழுத்து பூர்வமாக நாளை (03.01.2020) தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.