Skip to main content

'திருப்பதி போல் பழனி முருகன் கோவிலை மேம்படுத்தும் திட்டம்'-அமைச்சர் சக்கரபாணி தகவல்!

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

பழனி அருகே உள்ள தாழையூத்து ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பார்வையிட்டார்.

 

பின்னர் 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, பயிர்க்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு கடன்கள், நூறுக்கும் மேற்பட்டோருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், வேளாண்மைத்துறை சார்பில் வேளாண் கருவிகள், புதிய குடும்ப அட்டைகள் என மூன்று கோடி மதிப்பில் 900 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, ''திருப்பதி கோவில் போல் பழனி முருகன் கோவிலை மேம்படுத்தும் திட்டத்திற்கு முதல்வர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். அதேபோல் இன்னும் பத்து ஆண்டுகளில் குடிசைகள் இல்லா தமிழகமாக மாற்றும் முதல்வரின் கனவுத் திட்டம் நிறைவேறும் வகையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் விரைவுபடுத்தப்படும்'' என்று கூறினார்.

 

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர்  விசாகன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பொன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் மற்றும்  கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்