
விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணானதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, மழையால் நெல் வீணாகாமல் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் அறிக்கை ஒன்றை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தாக்கல் செய்தார். அதில், நெல் கொள்முதலுக்காக 468 குடோன்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 3 லட்சத்து 34 ஆயிரம் டன் நெல்லை பாதுக்காக்க முடியும் எனவும், அவை படிப்படியாக மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், கொள்முதல் நிலையங்களிலிருந்து தூரத்தில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படாத வகையிலும், அவர்களின் போக்குவரத்து செலவு, அலைச்சல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு அறிவுறுத்தினர்.
அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகளின் விளைநிலங்களுக்கே சென்று வேன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கொள்முதல் நிலையங்களில் இருந்து வெகு தூரங்களில் உள்ள குறிப்பாக சிறிய விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்ய எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.