சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மாவோயிஸ்ட் கைதி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் (அக். 11) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டையை சேர்ந்தவர் பகத்சிங் (34). மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு வந்தார். கொடைக்கானலில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருத்தல், கொலை முயற்சி ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு, கடந்த 2017ம் ஆண்டு முதல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், நேற்றுமுதல் திடீரென்று அவர் சில கோரிக்கைகளை முன்வைத்து சிறை வளாகத்திற்குள் இரண்டு நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய சகோதரரும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவருமான பழனிவேல் அண்மையில்தான் விடுதலை ஆகி வெளியே சென்றார்.
பகத்சிங், 'தன்னை அரசியல் கைதியாக நடத்த வேண்டும். தன்னைப் பார்க்க வரும் உறவினர்கள், வெளியாள்களை எந்தவித சோதனையும் செய்யாமல் அனுமதிக்க வேண்டும். சிறைக்குள் மனித உரிமை மீறல்கள் இருக்கக்கூடாது. இதுவரை நடைமுறையில் உள்ள சிறைத்துறை விதிகளை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும்,' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதேநேரம், ''இரண்டு ஆண்டுகளாக இந்த சிறையில் எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அமைதியாக இருந்து வந்த பகத்சிங், மற்றவர்களின் கவனத்தை பெற வேண்டும் என்பதற்காகவே உண்ணாவிரத போராட்டம் என்ற பெயரில் நாடகம் ஆடுகிறார்,'' என்கிறார்கள் காவல்துறையினர். இந்நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பகத்சிங்கின் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர். போராட்டத்தை கைவிடும்படி சிறைத்துறை நிர்வாகமும் அவருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.