Skip to main content

‘முக்கிய அமைச்சர்களுக்கு நாங்கதான் பினாமி! கோடானு கோடிகள் எங்கள் கையில்!’ -அமமுக பிரமுகரின் மோசடி மிரட்டல்!

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 


“அரசியல் செல்வாக்கு எங்களுக்கு அதிகம். முறைகேடாக சம்பாதித்த தமிழக முக்கிய அமைச்சர்களின் கோடானுகோடி பணத்துக்கும் சொத்துக்களுக்கும் நாங்கதான் பினாமி. எங்ககிட்ட மோதினா..  கொன்னு புதைச்சிருவோம்.”
-ரூ.75 கோடி கடன் தருகிறோம் என்று ஆசைகாட்டி, பதிவுக்கட்டணம் என்ற பெயரில் ரூ.1.5 கோடியை மோசடி செய்த கும்பலின் மிரட்டல் வார்த்தைகள் இவை.

முருகையா

m


அதிரடி பேர்வழிகளிடம் சிக்கி உயிர் மீண்டவர்கள் அளித்த வாக்குமூலம் இது-
’’பெங்களூருவைச் சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் சந்திரசேகர் ஆகிய நாங்கள்  கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தோம்.  திடீர் பண நெருக்கடியால், வங்கி அல்லது தனியாரிடமிருந்து வட்டிக்குப் பணம் வாங்கிட முயற்சிகள் மேற்கொண்டோம்.  அப்போது, பெங்களூருக்காரரான விஜய் என்பவர், தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி போன்ற ஊர்களில், வட்டிக்கு பெரும்தொகை பெற முடியும். அதற்கென்று மீடியேட்டர்கள் இருக்கிறார்கள் என்றார். டிடிவி தினகரன் கட்சியான,  அமமுகவின் திருநெல்வேலி – மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் முருகையாவை சந்திப்பதற்காக, பூபதி என்பவரிடம் அழைத்துச்சென்றார் விஜய். முருகையாவின் வீட்டில்தான் சந்திப்பு நடந்தது. அவருடைய மனைவியும், பிள்ளைகளும் “ஆமா.. பல கோடிகளை வைத்திருக்கும் அதிமுக தலைவர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள்  எங்களுக்கு மிகமிக வேண்டியவர்கள். நீங்க கேட்கிற ரூ.75 கோடியெல்லாம் சர்வசாதாரணம்.” என்றார்கள். பிறகு,  மதுரைக்கு எங்களை அழைத்துச்சென்ற பூபதி, அங்கு பாண்டியன் ஹோட்டலில்,  இவர்தான் உங்களுக்குப் பணம் தரப்போகும் ஃபைனான்சியர் எனச்சொல்லி, ஆளும் கட்சி முக்கிய அமைச்சரின்   பினாமி என்று  சேடபட்டி கூட்டுறவுச் சங்கத் தலைவர் ராஜேந்திரனை அறிமுகம் செய்து வைத்தார். 

 

ஹரிபிரசாத்

ஹ்


சேடபட்டி தாலுகா, குப்பல்நத்தத்தில் உள்ள ராஜேந்திரன் வீட்டில் மனைவி ராஜேஸ்வரி (முன்னாள் ஊராட்சி தலைவர்) மற்றும் மகன் தினேஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது, ராஜேந்திரன் கூறியபிரகாரம், ரூ.75 கோடி கடன் தொகைக்கு,  2 சதவீத பதிவுக்கட்டணமாக  ரூ.1.5 கோடியையும், கையெழுத்திட்ட 14 வெற்றுக் காசோலைகளையும்,  கையெழுத்திட்ட 6 வெற்று பத்திரங்களையும் கொடுத்தோம். மூன்று வெவ்வேறு வங்கிகளில்,  24 மணி நேரத்திற்குள் ரூ.75 கோடி டிரான்ஸ்பர் ஆகிவிடும் என்று கூறி, மதுரையில் காத்திருக்கச் சொன்னார்கள்.  நேரம் கடந்துகொண்டே போக, முருகையா மற்றும் பூபதியிடம் பணம் குறித்து கேட்டோம். குறிப்பிட்ட தொகையை வங்கியிலும், மீதி தொகையை ரொக்கமாகவும் கொடுத்துவிடுவதாகச் சொன்னார்கள். பிறகு, எங்களை மோகனூர் – காட்டுப்புதூர் – கிடாரம் ரோட்டுக்கு கூட்டிவந்து, கார் ஒன்றில்,  ஆறு பெரிய பைகளில் இருந்த 2000 ரூபாய் கட்டுக்களைக் காட்டி, மொத்தம் ரூ.30 கோடி இருப்பதாகச் சொன்னவர்கள், ஓசூர் போய் காத்திருக்கும்படி கூறினார்கள். பணத்தைக் கண்ணில் காட்டிவிட்டு, எதற்காக ஓசூர் போகச் சொல்கிறீர்கள் என்று கேட்டோம். மேலும் சிலரை எங்களுடன் அழைத்துவர வேண்டியதிருக்கிறது என்றார்கள் பூபதியும் முருகையாவும். 

 

ம்


பணத்துக்காக ஒருநாள் முழுவதும் ஓசூரில் காத்திருந்தோம். யாரும் வரவில்லை. தொடர்ந்து  தொடர்பில் இருந்த அவர்கள் பணம் தருவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்டனர். ஆனால், மூவரும் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை. பிறகுதான், நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம்.  நாங்கள் கொடுத்த  ரூ.1.5 கோடியையும், வெற்று காசோலைகள் மற்றும் பத்திரங்களைத் திரும்பக் கேட்டோம்.  சேடபட்டி, குப்பல்நத்தத்தில் உள்ள ராஜேந்திரனின் வீட்டுக்கு வரச்சொன்னார்கள்.  மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் இருந்தார் ராஜேந்திரன்.  பூபதியும் முருகையாவும் அங்கிருந்தனர். அனைவரும் சேர்ந்துகொண்டு எங்களைக் கடுமையாக மிரட்டினார்கள். கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி,  ரூ.1.5 கோடியை திரும்பத் தரமுடியாது என்றும்,  நாங்கள் கொடுத்த 6 வெற்று காசோலைகளை வைத்து, செக் மோசடி வழக்கு தொடர்வோம் என்றும் உறுதிபடச் சொன்னார்கள். ஆளும் கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் பெரிய ரவுடிகளின் பின்னணியில் உள்ள எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றார்கள். ஏற்கனவே பண நெருக்கடியில் இருந்ததால், நாங்கள் தொடர்ந்து கெஞ்சினோம். ஒருகட்டத்தில் அவர்கள் ஆவேசமாகி,  ஆள் அரவமில்லாத இடத்தில் உங்களைக் கொன்று புதைத்துவிடுவோம் என்று உயிர்பயத்தை ஏற்படுத்தினார்கள். அதன்பிறகுதான், ராஜேந்திரன், முருகையா, பூபதி, ராஜேஸ்வரி, தினேஷ் ஆகிய ஐவர் மீதும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தோம். 

 

தலைமறைவாகிவிட்ட மேற்கண்ட ஐவரையும் மதுரை மாவட்ட காக்கிகள் தேடி வருகின்றனர். இவர்களின் கைபேசிகள் அனைத்தும் ஸ்விட்ச்-ஆப் நிலையிலேயே தொடர்ந்து இருக்கின்றன. ’’ 

ம்

தமிழகத்தின் முக்கிய அமைச்சர்கள் கோடிகோடியாகப் பணம் வைத்திருக்கிறார்கள் என்பதையும்,  பினாமிகள் மூலம் அந்தப் பணத்தை அவர்கள் வட்டிக்கு விடுகிறார்கள் என்பதையும்,  கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹரிபிரசாத்தும், சந்திரசேகரும் அறிந்து வைத்திருக்கும் நிலையில்தான் தமிழகம் உள்ளது. தங்களின் பின்னால் ஆளும்கட்சி பிரமுகர்கள் இருக்கின்ற தைரியத்தினாலோ என்னவோ,  கோடிகளில் மோசடி செய்யும் துணிச்சல்,  முருகையா, ராஜேந்திரன் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

   

குறிப்பு: ராஜேந்திரன், முருகையா, பூபதி, ராஜேஸ்வரி, தினேஷ் ஆகிய ஐவரின் கைபேசிகள் அனைத்தும் ஸ்விட்ச்-ஆப்  நிலையில் இருப்பதால் அவர்கள் தரப்பு விளக்கத்தை பெற முடியவில்லை.

 

சார்ந்த செய்திகள்