தமிழகந்தோறும் சசிகலாவின் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர் டி.டி.வி.தினகரனின் அணியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர். இதில் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் சசிகலாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இவ்வேளையில்,தன்னுடைய படத்தை நோட்டீஸில் சிறிதாக அச்சிட்டுள்ளார்கள் என சசிகலா பிறந்தநாள் விழாவையே புறக்கணித்துள்ளார் கட்சியின் மா.செ.!
சிறையில் இருக்கும் சசிகலாவின் பிறந்த நாளை முன்னிட்டு இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் சன்னதியிலுள்ள ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு யாகமும், அதனையொட்டிய அன்னதானத்தையும் ஏற்பாடு செய்திருந்தது டி.டி.வி.அணியின் சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை. இதற்காக ப்ளக்ஸ் போர்டுகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு தடபுலாக வெளியிட்டிருந்தனர். அதில் முன்னாள் எம்.எல்.ஏ-வும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மா.செ.வான கூத்தக்குடி உமாதேவன் படம் மட்டும் சிறிதாகவும், அம்மா பேரவையின் மாநில செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை எம்.எல்.ஏ-வுமான மாரியப்பன் கென்னடி மற்றும் அம்மா பேரவையின் மா.செ.வான ஊரவயல் ராமுவும் புகைப்படங்களும் பெரிதாக அச்சிடப்பட்டிருந்தது.
இதில் கோபமடைந்த கட்சியின் மா.செ-வான கூத்தக்குடி உமாதேவன், " என்னுடைய படத்தை மட்டும் சிறுசாகப் போட்டுவிட்டு, மானாமதுரையை சேர்ந்த மாரியப்பன் கென்னடி படத்தை எவ்வாறு பெரிதாகப் போடலாமென", கட்சி நிர்வாகிகளிடம் மல்லுக்கட்டி விட்டு பிறந்த நாள் விழாவையே புறக்கணித்திருக்கின்றார். மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகளோ., " இது அம்மா பேரவையில் நடத்தப்பெறும் நிகழ்ச்சி.! கட்சியின் விதிப்படி தான் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் என்னுடைய படம் சிறுசாக வந்திருக்கின்றது. அதனால் நிகழ்ச்சியை புறக்கணிக்கின்றேன் என சொல்வது ஏற்புடையது அல்ல.!" என்கின்றனர். இருப்பினும், மா.செ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் இல்லாமலேயே யாக பூஜையையும், அன்னதானத்தையும் நடத்தி முடித்துள்ளனர்.
ஆக.! இந்நிகழ்வையொட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை எம்.எல்.ஏ-மாரியப்பன் கென்னடிக்கும், மா.செ.கூத்தக்குடி உமாதேவனுக்குமான கோஷ்டிப் பூசல் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கட்சியினரிடையேப் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.