தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் தயாளன் என்பவர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவ்வாறு மீட்கும் பணியின் போது முழங்கால் அளவிற்கு செல்லும் வெள்ள நீரிலும் ஒரு பெண் குழந்தையை கையில் ஏந்தியபடி சிரித்துக்கொண்டே அவரது வீட்டில் இருந்து மீட்டு வந்த புகைப்படம் மக்கள் மத்தியில் பலரது கவனத்தையும் ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் காவலர் தயாளனுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தலைமை காவலர் தயாளனின் செயலை பாராட்டி சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். இது குறித்து சென்னை காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள பதிவில், “தலைமை காவலர் தயாளன் ஒரு உத்வேகம் மிக்க உண்மையான ஹீரோ ஆவார். காவல்துறை அதிகாரிகள் சட்டத்தை அமலாக்குபவர்கள் மட்டுமல்ல, மக்கள் மீது அக்கறை கொண்ட மனிதாபிமானிகள் என்பதை தயாளன் காட்டியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.