Skip to main content

ஞானசேகரனுக்கு வலிப்பு; மருத்துவமனையில் அனுமதி

Published on 22/01/2025 | Edited on 22/01/2025
Gnanasekaran had a seizure; Hospital admission

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர்  ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக்  குழு விசாரித்து வருகிறது.

இந்த குழுவின் பரிந்துரை பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம்  மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

அதோடு சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் நேற்று  (20.01.2025) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஞானசேகரனுக்கு போலீஸ் காவல் முடிந்த பின்னர் (7 நாட்களுக்குப் பிறகு) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஞானசேகரனை நேற்று எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். இதற்கு முன்பாக என்னென்ன வழக்குகளில் ஞானசேகரன் சிக்கியுள்ளான். அதில் பதிவாகாத வழக்குகள் என்னென்ன என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து துணை ஆணையர் சினேகிப்பிரியா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். 

இரண்டாம் நாளாக இன்று அதிகாலையும் ஞானசேகரனிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது அதிகாலை 3 மணியளவில் ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஞானசேகரன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்ணா நகர் துணை ஆணையர் சினேக பிரியா ஞானசேகரனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நேரில் சென்று கேட்டறிந்துள்ளார்.

சார்ந்த செய்திகள்