"பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும்" எனத் தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் யுவராஜா கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அவர் வெளியட்டுள்ள அறிக்கையில், "தொடர்ந்து ஆறு நாளாகத் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை. மாறாகக் கடந்த 83 நாட்கள் மாறுதல் இல்லாமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை 7 ஆம் தேதி உயர்த்தப்பட்டது.
ஊரடங்கு துவங்கும் போது 72.28 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.78.47க்கு விற்கப்படுகிறது 65.71 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல் இன்று விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.71.14 க்கு விற்கப்படுகிறது.
கடந்த 6 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் மூன்று ரூபாய் விலை உயர்ந்துள்ளது. வாகனங்கள் வைத்திருப்போரையும், ஏழை - எளிய, நடுத்தர மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. மத்திய அரசின் தொடர் விலையேற்றம் மற்றும் தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி உயர்வு, ஆகியவற்றால் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு தளர்வு என அறிவித்து விட்டு, மறுபுறம் பெட்ரோல் டீசல் கட்டண உயர்வு என்று மக்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது. மேலும் கடந்த 3 மாதங்களாக வேலையில்லாமல் இப்போதுதான் மக்கள் அனைவரும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் அனைவரும் தங்கள் சொந்த வாகனத்தில் வேலைக்குச் செல்கின்றனர். அரசின் இந்தமாதிரியான விலையேற்றம் மக்களை வேதனையடையச் செய்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து மத்திய அரசும்- தமிழக அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு உயர்த்திக் கொண்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. விலையேற்றத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்." எனக் கூறியிருக்கிறார்.