
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்துவரும் நிலையில், அதைக் குறைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றம்சாட்டிவருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று (11/06/2021) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு மத்திய அரசிற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.